சூரியன், சந்திரன் உள்ளிட்ட 9 கிரகங்களும் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரின் உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் ஏதாவது ஒன்றில் தோஷம் ஏற்பட்டால் அந்த கிரகத்துக்குரிய பலன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போய் விடும். மேலும் கிரக சுழற்சி காரணமாக கெடுதல் பலன்கள்தான் நடக்கும். அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நமது முன்னோர்கள், தோஷ நிவர்த்தி தரும் ஆலயங்கள், பரிகார முறைகளை அளித்துள்ளனர்.அதன் அடிப்படையில் திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை, நவகிரகத்தால் ஏற்படுகின்ற தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் என தோஷங்களால் ஏற்படும் தடைகளுக்கு எந்தெந்த தலங்களை வழிபடலாம் என்று இந்த நூலில் செந்தூர் திருமாலன் விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார். பல தலங்களுக்குச் சென்று கள ஆய்வின் மூலமாகவும், ஓலைச் சுவடி மூலமாகவும் பல மேற்கோள்களைக் காட்டி செம்மையாகச் செய்துள்ளார். அந்த ஆலயங்களுக்குச் செல்லும் வழி, நடை திறந்திருக்கும் நேரம் போன்றவைகளையும் குறிப்பிட்டு இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
ஒவ்வொரு பூஜைக்கும், விரதத்திற்கும் தனி மகிமை உண்டு. எந்தப் பிரச்சினைக்கு எந்த தெய்வத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும், என்ன விரதத்தை கடைப்பிடித்தால் விரும்பியது நிறைவேறும் என்பதற்கு வழிகாட்டும் வகையில் பூஜைகள், விரதங்கள், அவற்றை பற்றிய புராண சாஸ்திர விளக்கம், விரதமுறைகள் மற்றும் விரதபலன்கள், காயத்ரி மந்திரம் ஆகியவற்றை மக்கள் பயன்பெறும் வகையில் 'வாழ்வை வளமாக்கும் பூஜை&விரதமுறைகள்' என்ற தலைப்பில் செந்தூர் திருமாலன் இந்த நூலை எழுதியுள்ளார். திருச்செந்தூர் மண்ணின் மைந்தரான செந்தூர் திருமாலனின் இயற்பெயர் எஸ்.நாராயணன். தஞ்சை தினத்தந்தியில் செய்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பத்திரிகைத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். சித்தானந்த சுவாமிகள் வரலாறு, மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மயிலம் முருகன்கோவில், வில்லியனூர் மாதா, வில்லியனூர் திருக்காமேசுவரர், திருவக்கரை வக்கிர காளியம்மன் வரலாறு உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் செந்தூர் திருமாலன் எழுதி, தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்ட '27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்' புத்தகம் பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, குறுகிய காலத்தில் பல பதிப்புகளை கண்டு பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி சாதனைப்படைத்தது. இந்த நூல் எழுத சிவாச்சாரியார்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் சில பட்டாச்சாரியர்களின் நேர்காணல், களப்பணிகள் மேற்கொண்டும் பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 'வாழ்வை வளமாக்கும் பூஜை&விரதமுறைகள்' நூலை படித்து விட்டு, வேலூர் பொற்கோவில் நிறுவனர் அருட்திரு சக்தி அம்மா, "விரதங்கள் குறித்து பல உண்மைகளையும், புராண சாஸ்திர விளக்கங்களையும், விரதத்தின் முறைகளையும் மற்றும் விரதத்தின் பலன்களையும், பூஜைகள் பற்றியும் முழுமையான தகவல்களுடன் 'பூஜை&விரத அகராதி' போல் வெளியிட்டு இருப்பது பாராட்டத்தக்கது. இந்நூல் ஆன்மிக உலகிற்கு கிடைத்த ஞான பொக்கிஷம் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.